திங்கள், 12 அக்டோபர், 2009

!கவியழகன்™ !கயமுகமறியான்™

**எதுவாவேன்?**

அறியேன் அறியேன் யானறியேன்
ஆண்டவன் ஏன்படைத்தானென்று யானறியேன்
இனிய உலகமிதில் – ஏனோ?…
ஈசன் என்னை படைத்ததேனோ?…
உழலும் வாழ்க்கைக்கடல் கடந்திடவோ!…
ஊர்போற்ற பேர்பெற்று வாழ்ந்திடவோ!…
எண்ணற்ற உலகமக்கள் – அதில்
ஏற்றம் பெற்று தெரிவேனோ?…
ஐம்பொறி ஆசை துறப்பேனோ?…
ஒற்றுமை எங்கும் வளர்ப்பேனோ?…
ஓர் உலகம் செய்வேனோ?…
ஔதசியம்போல் உலகிற்கு பயன்தருவேனோ?…
எஃகெனமாறி உலகை வெல்வேனோ?!…

ஃஃஃ

**நட்பு**

அன்பான என் தோழீ
ஆண்டவன்தான் கொடுத்தான் வாழீ
இன்முகம் காட்டினாய் கவியில்
ஈடில்லை நட்பின் உறவில்
உள்ளத்தில் குன்றாய் நின்றாய்
ஊருக்கு சொல்வேன் நன்றாய்
எதுவரை நட்பின் பாலம்
ஏதுமில்லை வானத்தில் எல்லை
ஐயமோ சிலநேரம் தொல்லை
ஒற்றுமைதான் எந்நாளும் திண்மை
ஓயாமல் செய்வோம் நன்மை
ஔவையாய் உயர்வாய் கவியில்
ஃபோல் தெரிவாய் தனியாய்.

ஃஃஃ

**தமிழ்ப்பெண்**

அழகான தேவதை அவள்
ஆண்டவனின் தனிப் படைப்பவள்
இன்முகமோ அவள் முகவரி
ஈடில்லா அழகோ வெகுமதி
உலகே வியக்கும் மெல்லிடை
ஊமை விழிகளோ வில்
எவர்தான் விரும்பார் சொல்
ஏமாற்றம் தான் விரும்பியோற்கு
ஐரிஸ் நிறமோ கண்
ஒரு தலையாய் காதலித்தோர்
ஓடாமல் ஓடுகின்றார் காண்
ஔரவம் தான் அவள்சொல்
அஃதேகாண் அவள் தமிழ்ப்பெண்.

ஃஃஃ

**மனைவி**

அவள் பிறப்பு வேறிடம்
ஆசைகளும் விருப்பங்களும் வேறுவேறு
இனிய காதலில் மலர்ந்தாள்
ஈடில்லா இல்லறத்தில் கலந்தாள்
உள்ளத்தை என்னிடம் கொடுத்தாள்
ஊர்போற்ற நல்லபெயர் எடுத்தாள்
என்விருப்பம் தனதாக ஏற்றாள்
ஏற்றம்பெற வழிகள்பல உரைத்தாள்
ஐஸ்வரியமாய் என்னில் நிறைந்தாள்
ஒவ்வொருநாளும் காதலை வளர்த்தாள்
ஓய்வின்றி குடும்பத்திற்காக உழைத்தாள்
ஔவியம் பேசல் தவிர்த்தாள்
இஃதே இல்லாள் அறமென்றுரைத்தாள்.

ஃஃஃ

**மக்கட்பேறு**

அன்பாய் குழந்தைகள் இரண்டு வேண்டும்
ஆசைதீர கொஞ்சி மகிழ்ந்திடல் வேண்டும்
இன்பம் பெற்றே வாழ்ந்திடல் வேண்டும்
ஈடுஇணை வேரில்லையென்று தெளிந்திடல் வேண்டும்
உலகுக்கு நல்மனிதராய் கொடுத்திட வேண்டும்
ஊர்போற்ற நல்லவராய் வளர்த்திட வேண்டும்
எட்டுத்திக்கும் அறியச் செய்திட வேண்டும்
ஏமாற்றம் தவிர்க்க பழக்கிட வேண்டும்
ஐயமின்றி செய்வன செய்திடல் வேண்டும்
ஒற்றுமை பேண கற்பித்திட வேண்டும்
ஓய்வின்றி வாழ்வில் உழைத்திட வேண்டும்
ஔவியம் பேச மறுத்திடல் வேண்டும்
இஃது எந்நாளும் மறக்காதிருத்தல் வேண்டும்.

ஃஃஃ

**வாரிசு**
அன்பு மகன் ஆதித்யா
ஆசை மகள் ஐஸ்வர்யா
இருவரும் எங்களின் உயிரோட்டம்
ஈடில்லா பாசத்தின் நீரோட்டம்
உயிராய் அன்பைப் பொழிகின்றார்
ஊட்டம் எம்வாழ்விற்கு கொடுக்கின்றார்
எங்களின் எண்ணம் புரிந்திடுவர்
ஏற்றம்பெற நாளும் உழைத்திடுவர்
ஐந்திலேயே இருவரும் தெளிந்திட்டனர்
ஒப்புமை சொல்லி வளர்கின்றனர்
ஓசைபோல் திக்கெங்கும் புகழ்பரப்பிடுவர்
ஔசித்தியம் நாளும் வளர்திடுவர்
அஃறிணைக்கும் பரிவுகாட்டி மானுடம் உயர்த்திடுவர்.

ஃஃஃ

**அடடா அருமை**

ஆண்டவன் படைத்தான் நம்மை
இயன்றவரை வளர்த்துவிடு திறமை
ஈசலாய் மாய்வது சிறுமை
உயர்வதற்கு வெல்லுங்கள் கயமை
ஊழ்வினை செய்வதா வறுமை
எதிரிக்கும் செய்யுங்கள் நன்மை
ஏற்றம்பெறும் உங்கள் நிலைமை
ஐயமின்றி போற்றிவிடு பெண்மை
ஒருநாளும் பொறுத்திடாதே மடமை
ஓதுவாரை தொடர்வதில்லை அறியாமை
ஔவையாரோ தமிழுக்கு பெருமை
ஃ தமிழின் தனித்தன்மை.

ஃஃஃ

***படித்ததில் பிடித்த***
அகரவரிசைக் கவிதைகள்

--
!கவியழகன்™

கருத்துகள் இல்லை: