
ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி, நான்கு பதினாறாகி...
விநாடிதோறும் சிதைந்து கொண்டிருக்கிறேன்.
ஒருபோதும் என்னால் மனிதனாக இருக்க முடியாது என்பதால்தான் என்னை பைத்தியம் என அழைத்துக் கொள்கிறேன். மனம் பிறழ்ந்த நிலையில் மட்டுமே வாழ நிர்பந்திக்கப்பட்ட நிலையில், வார்த்தைகளில் என்ன இருக்கிறது?
எனது மொழியை, எனது சிந்தனைகளை, எனது புத்தகத்தை, எனது காதலை, எனது காமத்தை... என்றுமே நான் தீர்மானித்ததில்லை. சுயமாக இருப்பதாகவும், சுயமாக சிந்திப்பதாகவும் நம்புவதில் இருக்கும் சுகமே 'பிதற்றலுக்கு' காரணம். நம்பிக்கைக்கும், அவநம்பிக்கைக்கும் மத்தியில் ஒவ்வொரு மைக்ரோ விநாடியும் ஊசலாடுவதில் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
எனக்கான அப்பம் என்றைக்குமே என் கண்களுக்கு தெரிந்ததில்லை. கைக்கும் எட்டியதில்லை. ஆனால், அடுத்தவனுக்கு கிடைத்த அப்பம் நியான் ஒளியில் என் முன் விஸ்வரூபம் எடுத்து புன்னகைத்துக் கொண்டிருக்கிறது. எனக்கும் அது போல கிடைக்கும் என நம்பச் சொல்கிறது. இரவில் வெந்து தணியும் என் உடலுக்கு ஊடகத்தில் ஊசலாடும் பெண்களே மருந்து தடவுகிறார்கள். அல்லது 'யாரோ' அவர்களிடம் மருந்து போட்டுக் கொள்ளும்படி என் ஆளுமையை வளர்க்கிறார்கள். நான் யாருடன் பேச வேண்டும் என்பதை என் தொலைபேசிக்கு வரும் அழைப்புகளே தீர்மானிக்கின்றன. அந்த அழைப்பை ஏற்பதும், மறுப்பதும் மட்டுமே எனக்கு கிடைத்த சுதந்திரம்.
வார்த்தைகளின் தாக்குதலில் மனம் சிதைவுறும்போது பிதற்றல்களே மறுமொழியாகிறது. கனவுகளைக் கூட அதிகாரங்களே தீர்மானிக்கும் நேரத்தில் உரக்கச் சொல்கிறேன்...
நான் மனிதனல்ல. பைத்தியக்காரன்....



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக